புதன், 29 அக்டோபர், 2014

சமர்ப்பணம்

வேலின் வேந்தனே, வள்ளி மணாளனே
மயில் வாகனனே, மனதைக் கவர்ந்தவனே
சேவற் கொடியோனே, சிந்தையில் நிறைந்தவனே
எப்பொழுதும் தவறாமல், எப்பொழுதும் வருவாய்
எப்பொழுதும் குறையாமல் , எப்பொழுதும்அருள்வாய்
சமரனே உன்னிடம், சமர்பிக்கின்றேன் என்னை !




செவ்வாய், 21 அக்டோபர், 2014

வெங்காயக் காதல் !

முதல் வகுப்பில்
முதல் மதிப்பெண் எடுத்த
குழந்தை மீது காதல் !

ஐந்தாம் வகுப்பில்
பைவ் ஸ்டார் பிடுங்கிய
பெதும்பை மீது காதல் !

பத்தாவது, பணிரெண்டாவதில்
பரீட்சைக்கு பிட் கொடுத்த
வஞ்சிகள் மீது காதல் !

கல்லூரியில் கண்ட
எல்லா  கன்னிகள் மீதும் காதல் !

படிக்கிற வயதில் 
பாடம் தான் காதல் 
என பெரியவர்கள் சொன்னார்கள்,
படித்தேன், வேலை கிடைத்தது !

வேலை செய்யுமிடத்தில் 
வெங்காயம் !!!!
எல்லா வெங்காயமும் விலை போய்விட்டன !
கண்ணீர் மல்க இயற்றினேன் 
இக் கவிதையை 
வெங்காயம் வெட்டிக்கொண்டு தனியாக !




புதன், 1 அக்டோபர், 2014

கிக்

டூ பீஸ்ஸில் சுற்றும் 
மேலைநாட்டு ஒயினை விட
தெருவோரத் தலை நிமிரா
தமிழ்நாட்டு கள்ளுக்கு கிக்கதிகம்


வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

விநாயகர் சதுர்த்தி

வேழ முகத்தோனே
              வினைகள் தீர்பவனே
வேதங்களின் முதல்வனே
               ஞானத்தின் தலைவனே
சித்தி புத்தியின்
               சீர்மிகு நாயகனே
வேண்டிய நல்லதை
                   வேண்டிய தருணத்தில்
வாரி வழங்கும்
                  பாரி வள்ளலே
சிரம் தாழ்த்தி
                 பணிந்தோம் அய்யா
சிறப்பான வாழ்வை
               சீவனுக்கு அளித்தமைக்கு !






             





ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

நில நடுக்கம் !

நிலம் அதிர்ந்ததை
உணர்ந்தேன்
நில நடுக்கமென்பதை
உணரவில்லை
என்னை கெடுத்துவிட்டது
தமிழ் சினிமா
பாத்திரம் உருள்வது தான்
நில நடுக்கமென்று


செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

நாயகி

பெண்ணே
பல நேரங்களில்
என்னைப் பார்க்காமல்
களவாடிச் செல்கிறாய்
சில நேரங்களில்
என்னைப் பார்த்து
புத்துயிர் அளிக்கிறாய்
உண்மை சொல் 'நாயகி'யே
நீ நல்லவளா ! கெட்டவளா !



சனி, 12 ஜூலை, 2014

முடியா மனப் போர்

முடியாத போரில்
முட்டிக் கொள்கின்றன
உனை காணச் சொல்லி
என் கண்களும்
கடந்து போகச் சொல்லி
என் மனதும்

தற்காலிகமாய்
வெற்றி பெற்றன
சில நேரங்களில்
கண்களும்
சில நேரங்களில்
மனதும்

பல நேரங்களில்
கண்களின் வெற்றி
கணத்தில் கரைந்தது
பெண்ணே உனக்கு
பக்கத்தில் ஏற்கனவே
அடி வாங்கும்
வலியவனை கண்டவுடன்

வெள்ளி, 13 ஜூன், 2014

மதுரை மீனாட்சி

பச்சைப் பட்டுடுத்தி
பைங்கிளியை  பாகம் வைத்து
நினை தொழுவோரின்
நினைவெல்லாம் நிவர்த்தி செய்து
தலை வணங்குவோரின்
தலைவிதியை மாற்றித் தொடுத்து
சங்கத்தமிழ் மதுரையை
சுந்தரமாய் ஆட்சி செய்யும்
மீனாட்சி தாயே
உனை மனதார போற்றுகின்றோம்



செவ்வாய், 10 ஜூன், 2014

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்?

தோகை மயில் தேகம் சுமக்க 
வேலும் தண்டமும் கரங்களில் தவழ 
துணைவியர் இருவரும் புஜங்களைக் கவர 
இடும்பனும் சேனையும் உன்னடி தொடர 
தினமென்னைக் காத்து திருவருள் புரியும் 
குழகனே, ஐம்முகனின் குமரனே, சரணடைந்தேன் 
உன் தாள் பெரும் உவப்புடனே 



திங்கள், 2 ஜூன், 2014

தேர்வறை தேவதைகள்

தெளிவாய்த் தெரிகிறார்கள்
தேவதைகளில் சிலர்  
தெரியாமல் முழிக்கும் 
தேர்வறையில் இளைப்பாற

திங்கள், 26 மே, 2014

பாரபட்ச உலகம்

சைட் டிஷ்சாக                 
சிக்கன் சாப்பிடுபவா்களும்                  
மெயின் டிஷ்சாக                        
சிங்கிள் டீ சாப்பிடுபவா்களையும்            
கொண்ட  பாரபட்ச  உலகமிது                   

வியாழன், 22 மே, 2014

புதிய வரிசை

ரேஷன் வரிசையும்
லேசாய்த் தள்ளி
நிற்க வேண்டும்
அமெரிக்க விசாவின்
அகண்டு விரிந்த
வரிசையின் முன்பு



சனி, 17 மே, 2014

அதிர்ஷ்டம்

நினைக்காத நேரங்களில் 
இல்லாத கதவுகள் 
தானாய்த் திறப்பது 


                       




சனி, 10 மே, 2014

அன்னைக்கு வணக்கம் !

பள்ளிக்கு போற பய
பொதி சுமந்து போறான்னு
பச்சரிசி சாதத்த பதமா செஞ்சவளே

மேற்பள்ளிக்கு போற பய
மேம்பட்டுப் மேன்நிலை அடைய
மேற்கொண்டு கடன முதுகுல சுமந்தவளே

காலேஜ்க்கு போற பய
கண் கலங்க கூடாதுன்னு
கண்ணில நீர திறபோட்டு  மறச்சவளே

அமெரிக்காவுக்கு போற பய
அவனிக்கே தலைவனாகப்  போறான்னு
ஆர்ப்பரித்து வானை தொட்டு திரும்பினவளே

நினைக்காத நாளில்லை மறந்த
பொழுதில்லை இயற்றினேனே என்
கவிதை நீ கொடுத்த தமிழினிலே

எட்டினேன் உயரத்தை
முட்டினேன் வானத்தை
படைத்த கவிதையை
மழையென பொழியவே !!



சனி, 26 ஏப்ரல், 2014

அழகுப் பூக்கள்

பூக்கள் அழகோ
பூக்கள் அழகோ
பூக்கள் போர்த்தும் பூமி அழகோ
பூமி உறையும் பிரபஞ்சம் அழகோ ?

பூக்கள் அழகோ
பூக்கள் அழகோ
பூக்கள் சொரிந்த கூந்தல் அழகோ
கூந்தல் சூடும் பெண்மை அழகோ ?

பூக்கள் அழகோ
பூக்கள் அழகோ
பூவினும் மெல்லிய மழலை அழகோ
கள்ளமில்லா மழலையின் நகை அழகோ ?

பூக்கள் அழகோ
பூக்கள் அழகோ
மனதைத் திருடும் பூக்கள் அழகோ
பிரம்மன் படைப்பில் பூக்கள் பேரழகோ ?








ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

தேடல்

தேடினேன்
தேயாமல் தேடினேன்
தேடினேன்
ஓயாமல் தேடினேன்
தேடித் தோற்றேன்
தோற்ற பின்
கண்டு கொண்டேன்
வெளியிலல்ல என்னுள்
உறைபவன் இறைவனென்று



புதன், 2 ஏப்ரல், 2014

எழுத்துப் பிழை


பலருக்கு
தொட்டில் பழக்கமாய்த் தொடர்கிறது
சிறு வயதில் கற்ற
எழுத்துப் பிழை

பணம் வளர்க்கிறார்கள்
குணம் வளர்க மறந்து
பகை வளர்க்கிறார்கள்
நகை வளர்க மறந்து

இப்பூமியில் பிறந்தால்
இறக்க மாட்டோமென நினைக்கிறார்கள்
இருக்க  மாட்டோம் எப்பொழுதும்
என்ற நிதர்சன உண்மையறியாமல் 

வியாழன், 20 மார்ச், 2014

கோட்டை விட்ட கதைகள்

தூரத்தில் உன்னை
கண்டவுடன் பாய்ந்து
பேச துடிக்கும்
என் மனது

அன்னியமாய் பதுங்குகிறதே
அமைதியாய், அருகில்
உனை கண்டவுடன்

முட்டாள் மனது
மறந்தது போலும்
தான் பாயாமல்
பதுங்கி கோட்டை
விட்ட கதைகளை

சனி, 15 மார்ச், 2014

சொக்கத் தங்கம் !

தந்தையின் அன்பு
தாயின் உடலில்
சேமிப்பாய் சேர்ந்து

சொர்கக் கருவில்
     வட்டியின் குட்டியாய்

வேகமாய் வளர்ந்த
சொக்கத் தங்கத்தின்
சொச்சம் நாம் 






திங்கள், 10 மார்ச், 2014

கோல்டன் கேட்

தெரியாமலா உனக்கு
"கோல்டன் கேட்"டென
பெயர் சூட்டினார்கள்
இல்லை.. இருக்காது
நிச்சயமாக இருக்காது ...

ஓல்ட் இஸ் கோல்ட்
என்ற பழமொழியை
பறைசாற்றி  நிற்கும்
புதுமொழி நீ

எத்துனை முறை
காண விழைந்தாலும்
அத்துனை முறையும்
தங்க நினைவுகளை
வார்ப்பது  நீ

கலர்க்  கனவுகளோடு
தினம் களமிறங்கும்
ஆயிரம் மாயிரம்
சிறகடிக்கும் மனங்களை
சிவப்பு கம்பளத்தில்
வரவேற்பது  நீ


இறைவன்
செம்மையாய் செதுக்கிய
சிற்பமோ நீ ?
திண்மையாய் தீட்டிய
ஓவியமோ நீ ?
காண்பவர் எவரையும்
அசராமல் கவரும்
மாயையோ நீ ?




   

வெள்ளி, 7 மார்ச், 2014

பெண்மை

தாயாய் தாரமாய்
தினம் மகிழ்விக்கும்
தங்கக் குழந்தையாய்

தோழியாய் காதலியாய்
துன்பத்தில் துவழும்போது
தோள்சாயும் தோகையாய்

குறும்பான குழந்தையாய்
வீரமான வஞ்சியாய்
கோபம்கொண்ட குமரியாய்
பேதைப் பெண்ணாய்
அன்பான அன்னையாய்
அரவணைக்கும் அத்தையாய்
பழங்கதை பேசி
பண்பாளராக்கும்  பாட்டியாய்
திக்கெங்கும் நிறைந்திருந்தும்
திகட்டாத பெண்மைக்கு
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !





ஞாயிறு, 2 மார்ச், 2014

வாழ்க்கை

கணிக்க முடியா ஓர்
கணிதம்
விவரிக்க முடியா ஓர்
விஞ்ஞானம்
விடையறிய முடியா ஓர்
விடுகதை

அது பங்குச்சந்தை அல்ல
நேற்றைய நிலவரப்படி
இந்நொடியை கணிப்பதற்கு

அது சதுரங்கமும் அல்ல
நடக்கப்போவதை கணித்து
மாற்றி விளையாடுவதற்கு

நிலவரத்தால் நடுங்காமல்
கணிப்பால் கலங்காமல்
வாழ்வை வாழ்வோம் !






புதன், 26 பிப்ரவரி, 2014

மகா சிவராத்திரி

ஆதி அறியா
அந்தம் இல்லா
ஆதிபகவா  !

ஆணும் பெண்ணும்
அவரவரின் அரையென்றுணர்த்தும்
அர்த்தநாதீஸ்வரா  !

வினையறுத்து குறைதீர்க்கும்
விடத்திற்கு மறியா
வைகல்நாதா !

காலத்தை வென்று
காலத்தைக் கடந்த
காலபைரவா !

குழகனின்  கனலே
கருணைக் கடலே
காலகாலா !

விநாயகனின் வித்தே
வேண்டுபவரின் சொத்தே
வில்வவனநாதா !

பிரணவப் பொருளே
பிரபஞ்ச முதலே
பிறைசூடா  !

அன்பின் உருவே
அரு உருவே
அடல்விடைப்பாகா !

மனதின் உள்ளே
மங்காது உணரும்
முக்கண்ணா !

அடியனின் தெரிவே
கண்ணின் சுடரே
எழுத்தின் தெளிவே
சொல்லின் சுவையே
செந்தமிழில் சொல்லெடுத்து
பைந்தமிழில் பாட்டெழுதி
சற்பிரசாதம் வேண்டி
சமைத்தேனே கவி !





ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதலர் தினம்

பூவுலகில் காதல்
பூ பூக்காவிடில் ...

பூக்களின் விலையோ
பாதியாய்க் குறையும்
மன்மதனின் அம்போ
மலையாய்க் குவியும்

தொலைபேசி தொல்லையில்லாமல்
தொலைந்தே போகும்
அலைபேசி அழைப்பில்லாமல்
அழிந்தே போகும்


பைக்கின் பின்புறம்
பொலிவிழந்து போகும்
துப்பட்டா துப்பில்லாமல்
மறைந்து போகும்

கொஞ்சும் புது
தமிழ் சொற்கள்
காற்றோடு கரையும்
கடற்கரையில் சுண்டல்
சுவடில்லாமல் மறையும்

சிலரின் தூக்கம்
சத்தமில்லாமல் கழியும்
பல பெற்றோரின்
வேலை சிலமடங்காகும்



செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

குறையில்லா மனது, நிறைவான உலகு

உடல் மாறி  இருந்தாலும்
மனதில் திடம் இருந்தால்
எண்ணத்தில் உரம் இருந்தால்
மலையை சாய்க்கலாம்
கடலைக் கடக்கலாம்
ஏன் உலகையே புரட்டலாம்

அன்றி ஊணில் இருந்தால்
சிறு கல்லும் மலையாகும்
சிறு மடுவும் கடலாகும்
மலராது காயும்
வாழ்வென்னும் பூ !




கண்டம் பல கடந்து இருந்தாலும்  என்னை பாதித்த இருவருக்கும், வாழ்ந்து காட்டிக்கொண்டு இருக்கும் பல கோடி நண்பர்களுக்கும் சமர்ப்பணம்   :

Vaikom Vijayalakshmi




Richie Parker





செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

நானும் நீ, நான் வணங்கும் நாதனும் நீ

கருவும் நீ
கருவுக்குள் இருக்கும் உயிரும் நீ
பொருளும் நீ
பொருளைக் கொணரும் அருளும் நீ
வலியும் நீ
வலியைக் வதைக்கும் வழியும் நீ
திசையும் நீ
திசை எங்கிருக்கும் திரையும் நீ
கதிரும் நீ
கதிரை உமிழும் கனலியும்  நீ

எழுத்தும் நீ
எழுத்தாய் உதித்த சொல்லும்  நீ
சொல்லும்  நீ
சொல்லைக் கோர்த்த வரியும் நீ
வரியும் நீ
வரி உணர்த்தும் பொருளும் நீ
பொருளும் நீ
பொருளாய் மணக்கும் தமிழும் நீ

கந்தா
கவியும் நீ
கவி செதுக்கிய கவியும் நீ
நானும் நீ
நான் வணங்கும் நாதனும் நீ ...








ரத சப்தமி

ரட்சிக்கும் உலக மித்திரா
ரதத்தினில் வலம் வந்து
தினம் ஜகத்திற்கு உயிரூட்டுவாயே

தாமரையை ஒளிரச் செய்யும்
வெயிலோடு,  துவண்ட என்
நெஞ்சையும் மலரச் செய்வாயே

பகையும் தீயும் என்னை
படராமல் அணுகாமல்,பகலவனே
தினம் பனியாய் உருக்குவாயே

உலகம் மகிழ்வுற மழையைப்
பொழிந்து, அன்பு துளிர்விட
பண்பெண்ணும் விதையினை விதைப்பாயே

ஏழு வர்ண குதிரையேறி
எம் வாழ்வில் வர்ணமடிக்கும்
கதிரவா, வணங்குகிறேன் உன்னை
எந்நாளும் பொன்னாளாய் மலர்ந்ததுக்கு !









சகலகலாவல்லி





களையெடுத்து எந்தன் மனதில்
கலையை விதைத்த கலைவாணியே

பேதைமை எரித்து எனக்குப்
பாதை வகுத்த பாமகளே

நல்லதோர் வினை செய்ய
நாவன்மை அளித்த நாமகளே

உன்னருள் பெற்ற பெருவெள்ளத்தில்
என்னையும் சிறுதுளியாய் சேர்த்ததற்கு
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
வெள்ளைத் தாமரையில் வீற்று 
வெள்ளைப் பட்டுடுத்தி வரமளிக்கும் 
சரஸ்வதி தேவியே,சகலகலாவல்லியே 

வியாழன், 30 ஜனவரி, 2014

வாலை முறுவஞ்சி


கேட்டதைக் கொடுக்கும் காமாட்சியே
புவனதிற்கு பொருளளக்கும் புவனேஸ்வரியே

மன மாசகற்றும் மீனாட்சியே
அடியவருக்கு அருளும்  அபிராமியே

பட்டருக்காக காதணியை பௌர்ணமியாக்கிய தாயே
இப்பக்தரின் வாழ்வில் ஒளி எற்றுவாயே

பெரும் பொருளாகிய உன் அருளையும்
உன் அருளால் சிறுபொருளும் அருள்வாயே
வினையறுத்து விதியை வளைத்து
வழி நடத்தும் வாலையே ...
 



சனி, 25 ஜனவரி, 2014

குடியரசு

பாரதம் ...

பரதமும் ஓடிசியும்
கலந்தாடும் களமிது
காந்தியும் சுபாஷும்
குடியிருந்த கோட்டையிது

சிவனையும் புத்தனையும்
சேர்த்த சிற்பமிது
அல்லாவையும் ஏசுவையும்
பிணைத்த கதையிது

கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாளமிது
அரிசியும் கோதுமையும்
செழிக்கும் காணியிது

தமிழும் சம்ஸ்கிருதமும்
தோய்த்த  ஓலையிது
குமரியும் இமயமும்
பாதுகாக்கும் கணமிது

வேற்றுமையில் ஒற்றுமை
என்றனர், வேற்றுமையே
இல்லையே பிறகெதற்கு
ஒற்றுமை ?

எல்லையைக் காக்கும் படை
வீரர்களுக்கு வணக்கம் வைத்து
உவப்புடன் வணங்குகிறேன், இந்தியக்
குடியரசை, எங்கள் பேரரசை !





ஞாயிறு, 19 ஜனவரி, 2014

கண்டாங்கி, கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு !

சிகப்பு சேலை அணிந்த சீமாட்டி 
என் மனதை கொள்ளை கொண்டாளே  
அவள் புன்சிரிப்பை காட்டி 

தூரத்தில் நின்றாளே ஆற்றின் வளைவு காட்டி 
என் கால்கள் அவள் நின்ற திசை
நோக்கி நகர்ந்ததே போக்கு காட்டி   

சென்றாள் அன்ன நடை காட்டி  
என் கண் அவளைப் பின் 
தொடர்ந்ததே என்னிடம் டூ காட்டி 

என்னை அவள் பார்த்த கணம் 
தென்றல் வீசியதே என்னை நோக்கி  
அவள் பார்த்த பின் நான் 
என்னை விட்டு ஓடினேனே விலகி விலகி 

பூவைச் சுற்றிய சேலையின் நடுவே 
தெரிந்ததே ஒரு வெள்ளிக் கீற்று
என் கைகள் அதனை பக்கத்
துணையாக்க பறந்ததே வெள்ளிடை நிரப்ப   ...









வியாழன், 16 ஜனவரி, 2014

வேலின் வேந்தனே !

பூக்களை அடையா  தேனீ இல்லை 
காற்றைத் தேடா குழல் இல்லை 
கடலைச் சேரா ஆறு இல்லை 
நிலவை நேசிக்கா புலவனும் இல்லை 

வேலின் வேந்தனே, பராசக்தியின் புதல்வனே  
நீ இல்லாமல் நான் இல்லை
உன்னை நினையாத நாளும் இல்லை 
உன்னருளுக்கு நிகர் வேறு பொருளுமில்லை  
உன் அன்பில்லாமல் என் வாழ்க்கையுமில்லை ! 



செவ்வாய், 14 ஜனவரி, 2014

தமிழன்னையின் பிறந்தநாள்

பிறந்தநாளாம்
தமிழன்னையின்
பிறந்தநாளாம்

கம்பனையும் கல்கியையும்
வள்ளுவனையும் பாரதியையும்
வற்றாமல் ஈணும்
பெருந்தாயின்  பிறந்தநாளாம்

கார்பன் டேட்டிங்கும்
கணக்கிலட முடியா
தொன்மையின் பிறந்தநாளாம்

வயதில் தொன்மையனாலும்
சொல்லழகிலும் நடையழகிலும்
ரம்பைக்கு  சவால்விடும்
ரதியின் பிறந்தநாளாம்




அழகில் மயங்கி
சில பல
காலமாய்
கவர முயற்சித்து
கவ்வினார் மண்ணை
கலக்க முயற்சித்து
கலந்தார் காற்றோடு
அழிக்க முயற்சித்து
அழிந்தார் கால ஆற்றோடு


வாழ்த்த வயதில்லை
நம் அன்னையை
வணங்குகிறேன் பெருமையோடு
பேரிகைப் பேரிடியாய்
பறைசாற்றுகிறேன் தமிழனென்று !







திங்கள், 13 ஜனவரி, 2014

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

தித்திக்கும் கரும்பை திகட்டாமல் தின்று 
தித்திக்கும் அன்பை திகட்டத் தந்து
இனிப்பான பொங்கலை இனிதே உண்டு
இந்நாளும் இவ்வருடமும் இனிதே சிறக்க
தித்திக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !




பொங்கலோ பொங்கல் !

பொங்கலோ பொங்கலென உவப்புடன் கூவுவோம்
தமிழர் மனம் அன்பால் பொங்கிட
மாதம் மும்மாரியால் முப்போகம் விளைந்திட
பயிர் செழித்து பசிப் பிணியருத்திட
உழவனின் அடுப்பு ஓய்வின்றி ஒளிவிட
பொங்கலோ பொங்கலென உவப்புடன் கூவுவோம்







திங்கள், 6 ஜனவரி, 2014

காற்று வாங்க போனேன் .. ஒரு ...

காலைக் காதலன் கிழக்குக் 
கதிரவனின் கண்ணொளி பட்டு 
மாலைக் காதலன் முழு 
நிலவில் மோகம் கொண்ட 
வாடைக் காதலி வஞ்சிப் 
புவி மார்கழிப் பனியில் 
முகம் துடைத்தெழும் அழகிற்கு 
ஈடு இணை உண்டோ 


புதன், 1 ஜனவரி, 2014

கவிதை மழை

எட்டினேன் உயரத்தை
முட்டினேன் வானத்தை
பிழிந்தேன் மேகத்தை
மழையாய்  பொழியவே
கந்தா நீ
இயற்றி நான்
செதுக்கிய கவிதையை !



புத்தாண்டு

அளவாய் உண்போம், உடற்பயிற்சி செய்வோம்
சூரியனுக்கு முன் எழுவோம் என
பழையதாகிப் போன, போன
புதுவருடத்தின் புது உறுதிகளை
தூசு தட்டி மீண்டும்
புதுவருடத்தின் புது வசந்தமாய்
புதினம் செய்யும் புதுக்களம் !



புத்தாண்டு ஆசை !

அலைகடலென ஆர்ப்பரிக்கும்
மனதை ஆழ்கடலென
மாற்ற ஆசை

தடதடவன ஓடும்
எண்ணங்களைத் தடுத்து
அணைபோட ஆசை

கவலை மறந்து
கண்டமெல்லாம் ஊர்
சுற்ற ஆசை

துன்பத்தால் துவளாமல்
துடிப்போடு நடை
போட ஆசை

பயத்தை எதிர்கொண்டு
பயத்தை பயமடைய
வைக்க ஆசை

பணத்தால் அல்ல
மனதால் பகட்டாய்
வாழ ஆசை

எப்பொழுதும் தன்னலம்
பாராமல் பிறருக்கு
உதவ ஆசை

முத்தமிழில் முழ்கி
முத்தெடுத்து  கவிமாலை
புனைய ஆசை

கையளவு கற்க
தினமொரு நூலை
கையிலேந்த ஆசை

அமைதியான செழிப்பான
அழகான  உலகை
காண ஆசை

பற்றே இல்லாமல்
பரதேசியாய் பறந்து
திரிய ஆசை

நடந்ததைத் மறந்து
நடப்பதில் கவனம்
செலுத்த ஆசை

நடக்கப் போவதை
துறந்து இத்தருணத்தை
கொண்டாட ஆசை

வாழ்வைச்  சுழற்றும்
கோள்களின் சுழற்சியைக்
கற்க ஆசை

பொருளைத் தேடாமல்
மெய்பொருளைத்  தேடிக்
காண ஆசை

ஆசை அறுத்து
ஆசை அடக்கி
வாழ ஆசை  .....