திங்கள், 14 ஆகஸ்ட், 2017

அகவை 30

இரு பத்துகளை  எம்பி  
இன்று 
அகவை முப்பது

திரும்பிப் பார்க்கின்றேன்  ..

பரபரக்கும் உலகினில்
பரபரப்புக்குப்  பஞ்சமில்லாமல்
பரபரப்பாய் நான்

என்னவென்று தெரியாமல்
எப்படி என்று அறியாமல்
புரியாத பந்தயத்தில்
பந்தயக்குதிரையாய் நான்

தியானம் தினம் செய்
உடலை பயிற்சி செய்
நாவடக்கம் பழகென
எட்டு முழ வேட்டிக்கு
போட்டியாய் என் பட்டியல்

நொடி நொடியாய் வாழ்கவென்று
கோடிப்  பேர் சொன்னாலும்
நொடிக்கொருமுறை புரிந்தாலும்
கட்டுக்கடங்காமல் எம்மனம்
கட்டவிழ்த்த குதிரையாய்

தொட்டுவிடும் தூரமா
தொலைதூரமா தெரியவில்லை
வாழ்வின் பல ஆசைகள்

முன்னே விழிக்கின்றேன்
அடுத்த முப்பதை ...

கற்ற பாடங்களும்
கடந்த பாதைகளும்
நடக்கின்றன முன்னே
உற்றத் துணையாய்

முதல் முப்பது
முத்தாய் போனது 
இரண்டாம் முப்பது 
இன்பமாய்ப்  போகட்டும்
செழிப்பாய்ப்  போகட்டும் 
செம்மையாய்ப்  போகட்டும்
அறியாத இடங்களில்
தெளிவாய் இருக்கும் 
புரியாத சக்தியின்
உண்மையை உணர்த்திப் போகட்டும்!!

















  















சனி, 29 ஜூலை, 2017

கவிதை அருள்வாய் நிலவே

வானவீதி அளக்கும் வெண்ணிலவே
கவிஞனின் அளவுகோலே பொன்னிலவே
உன்னை வரையாதவன் ஒவியனல்ல
இயற்றாதவன் கவிஞன் அல்ல
ரசிக்காதவன் மனிதனே அல்ல

இரவு கண்ட உன்னையும்
இரந்து கண்ட கன்னியையும்
ஒப்பிட்டு ஓதுதலே 
கவிஞர் கல்லூரியில்
கண்ணியமாய் கரைசேர
ஒப்புயர்வு வழியாகும்

பல ஆயிரம் வருடங்களாய்
பல்லாயிரம் கவிஞர்கள்
பல்லாயிரம் கோடி கவிதைகளில்
இயற்றினார் உன்னை

நகலெடுக்க மனதில்லை
பிரதி எடுத்துப் பயனில்லை
படியெடுக்கப் பிடிக்கவில்லை

வார்த்தை தேடினேன்
புது வார்த்தை தேடினேன்
தமிழ் அகராதியில் !

அகராதியோ எள்ளி நகைத்தது
எட்டிப் போகச் சொல்லி இடித்தது

இடித்த வேகத்தில் இடறி
விழுந்தேன்
ஓடினேன் வேங்கையென

உன்னைக் கண்டு
கவிதை புனைய

நீயோ சொல்லாமல் கொள்ளாமல்
தேய்பிரையென தேய்ந்து விட்டாய்

துவளாமல் திணறாமல் திகைக்காமல்
வந்த வெளிதனை
வெறிக்காமல் பார்த்தால்
சிதறாமல் எனக்கும் கொடுத்துள்ளாய்
சிறு கவிதையினை

புரியவைத்தாய்
ஒப்பிடுவது மட்டும் கவிதையல்ல
நினைப்பதற்கு ஒப்பனை சேர்ப்பதும்
கவிதையே என !











வியாழன், 19 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு

கணிணியில் குறியீடு செய்து
வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி
பேஸ்புக்கில் எதிர்ப்பைத் தெரிவித்து
துடிப்பாய் ட்விட்டரில் டீவீட்டி
அவசர கதியாய் மறக்கும் 
மற்றவர் போல், நாங்களும்
வீழ்வோம் என நினைத்தாயோ ?

மரபு காக்க களம் இறங்கிப் போராடும் எம் தமிழ் மக்களுக்கு சமர்ப்பணம் ! 

வெள்ளி, 6 ஜனவரி, 2017

வாழ்க்கை கண்ணோட்டம்

வகையாய்  மாறுகின்றது
வாழ்வின் கண்ணோட்டம்.

பம்பரமாய்  சுழலாமல்,
அவசரமாய் பறக்காமல்,
இயந்திரத்தில் மூழ்காமல்,

சில நேரங்களில்
கண்ட
சில மனிதர்களாலும்,

சில நாட்களில்
உணர்ந்த
சில நிகழ்வுகளாலும்.

திசை திருப்பின   
வாழ்வின் மீதுள்ள 
பயத்தை நன்றியாக
நடுக்கத்தை நெகிழ்ச்சியாக
ஏக்கத்தை ஏகாந்தமாக.

வேண்டுதல் நிறைவேற்றுவது
இறைவனோ இயற்கையோ
தலைவிதியோ தற்செயலோ
இக்கண வேண்டுதல் ஒன்றே!

பயத்தை பொசுக்கி
நடுக்கத்தை நசுக்கி
நன்றியை பெருக்கி
நெகிழ்ச்சியை நிலைநிறுத்துக!