புதன், 13 மே, 2020

கவிதாஞ்சலி





கலைகளின் அரசியே
கலைமாமணியே, கலைஅரசியே!

தைரியமுன் மறுபெயரே
தன்னம்பிக்கையுன் தனிச்சிறப்பே

கரு முதல்
கடைசி வரை
கருமமே கண்ணாயிருந்தவளே

பெற்றோரை தம்பிள்ளையாய்
பேணிக் காத்தவளே 
மற்றோரையும் உறவாய்
மதித்துப் போற்றியவளே

தூய அன்பால்
நாய்க் குட்டிகளை  
உருகச் செய்தவளே
காந்திமதி கல்யாணியின்   
'பெரிய'குட்டியயே 

நெட்டிப் பந்தாட்டத்திலும் 
பூப் பந்தாட்டத்திலும்
மேசைப் பந்தாட்டத்திலும்
தங்கப் பதக்கங்களை
மலையாய்க் குவித்தவளே
கோப்பைகளைக் கொண்டு  
கோபுரம் செய்தவளே
சுழற்கேடயங்களை தக்க
வைக்கும் சூட்சுமமறிந்தவளே

அன்னையின் தமக்கையே
எனது அன்னையே,
சுந்து என்றழைக்கும்
சுந்தரச் சித்தியே

இருசக்கர வாகனத்தில்
மீண்டும் ஒருமுறை
எனையேற்றிச் செல்வாயா…

வசைச் சொற்களால் 
மீண்டும் ஒருமுறை
எனை வசைபாடுவாயா…

ரோட்டோர பரோட்டா
மீண்டும் ஒருமுறை
வாங்கித் தருவாயா…

திருநெல்வேலி அல்வா
மீண்டும் ஒருமுறை
சுவைக்கத் தருவாயா…

மீனாட்சி கோயிலுள் 
நுழைவுச்சீட்டு இல்லாமல்
மீண்டும் ஒருமுறை
நுழைய வைப்பாயா…

குலதெய்வ கோவிலுக்கு 
மீண்டும் ஒருமுறை
கூட்டிச் செல்வாயா…

கலையாத நினைவுகள்
தந்து விட்டு
எங்கள் வாழ்வை
களையிழக்கச் செய்து
சென்று விட்டாயே
அரசியே, கலைஅரசியே!