வெள்ளி, 25 டிசம்பர், 2015

சீட்டுக்கட்டு கோபுரங்கள்

மனிதரின் வாழ்க்கை
சீட்டுக்கட்டு கோபுரங்கள்
பார்த்து பார்த்து
ஒவ்வொரு சீட்டாய்
சேர்த்து சேர்த்து
எழுப்புகின்றார் அவரது கோபுரத்தை

அவர் நினைத்த உயரத்தில்
ஆனந்தம் அடைகின்றார்
ஆனந்தம் சில நொடிகளே

பக்கத்து வீட்டுக்காரரின்
உயர்ந்த கோபுரத்தை
காணும் வரையில்
இல்லை எதிர்
கோபுரத்தின் அழகில்
மயங்கும் வரை ..

ஆனந்தம் சில நொடிகளே
ஆனந்தம் சில நொடிகளே
செருக்காய் மாறும் முன்
கோபுரத்தின் பிரமாண்டம்
பிரமாண்டமாய் மறைக்கிறது
பல நேரங்களில்
நம் கண்ணை

மறந்து விடுகிறோம்
நடுவில் ஒரு சீட்டு
விழுந்தாலும் நாம்
தரையில் என்று

மறந்து விடுகிறோம்
கோபுரமே ஆனாலும்
அவை சீட்டுகளே
வெறும் காகித
சீட்டுகளே என்றுஞாயிறு, 15 நவம்பர், 2015

வெள்ளம், நமது கள்ளம்

ஆற்றின் அளவை சுருக்கி
குளத்தின் வயிறை நிரப்பி
நீரின் இடத்தைத்  திருடி
விண்ணைமுட்டும் வீடாய் மாற்றினோம்

இருந்த இடத்தைக் காணாது
தேடி அலையும் நீரை
குறை சொல்லிப் பயனில்லை
கூக்குரல் எழுப்பும் மனிதா !


புதன், 23 செப்டம்பர், 2015

ரப்பர் ரம்பை

ரப்பரில் செய்த
ரம்பையோடி நீ !
நெருங்கி வந்ததும்
தெறித்து ஓடுகிறாயே
சுவற்றிலடித்த பந்து போல !

வியாழன், 26 பிப்ரவரி, 2015

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு
விந்தையான ஆசான்

பல தருணங்களில்
பரீட்சை வைத்துப் 
பாடம் நடத்தும்
சில தருணங்களில்
பாடம் மட்டும் சொல்லி   
பரிசு கொடுக்கும் 

சிற்சில நேரங்களில்
பரிசு கொடுத்துப்
பின் பாடம் நடத்தும்

தரிசைத்  தங்கமாக்கும்
தங்கத்தைத்  தரிசாக்கும்
தலை கனமானால் !


செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சிவராத்திரி

ஆதியும் நீ
ஆதி சக்தியின் பாதியும் நீ
அந்தமும் நீ
திக்கு எங்கிருக்கும் சந்தமும் நீ
ஓசை நீ
ஓசை புரியா இசையும்  நீ

முற்றும் நீ
முற்று இல்லாத பற்றும் நீ
அன்பும் நீ
அன்பே சிவமென்றுணர்தும் பண்பும் நீ

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ம(ன)ருத்துவத் திருடி

உன்னை கண்டதிலிருந்து
பைத்தியமாய் அலைகிறேன்
பைத்தியங்களுக்கு  வைத்தியம்
பார்க்கும் உன்
வைத்திய மனதில்
கிடைக்கும் இடத்திற்காக !