வியாழன், 30 ஜனவரி, 2014

வாலை முறுவஞ்சி


கேட்டதைக் கொடுக்கும் காமாட்சியே
புவனதிற்கு பொருளளக்கும் புவனேஸ்வரியே

மன மாசகற்றும் மீனாட்சியே
அடியவருக்கு அருளும்  அபிராமியே

பட்டருக்காக காதணியை பௌர்ணமியாக்கிய தாயே
இப்பக்தரின் வாழ்வில் ஒளி எற்றுவாயே

பெரும் பொருளாகிய உன் அருளையும்
உன் அருளால் சிறுபொருளும் அருள்வாயே
வினையறுத்து விதியை வளைத்து
வழி நடத்தும் வாலையே ...
 



சனி, 25 ஜனவரி, 2014

குடியரசு

பாரதம் ...

பரதமும் ஓடிசியும்
கலந்தாடும் களமிது
காந்தியும் சுபாஷும்
குடியிருந்த கோட்டையிது

சிவனையும் புத்தனையும்
சேர்த்த சிற்பமிது
அல்லாவையும் ஏசுவையும்
பிணைத்த கதையிது

கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாளமிது
அரிசியும் கோதுமையும்
செழிக்கும் காணியிது

தமிழும் சம்ஸ்கிருதமும்
தோய்த்த  ஓலையிது
குமரியும் இமயமும்
பாதுகாக்கும் கணமிது

வேற்றுமையில் ஒற்றுமை
என்றனர், வேற்றுமையே
இல்லையே பிறகெதற்கு
ஒற்றுமை ?

எல்லையைக் காக்கும் படை
வீரர்களுக்கு வணக்கம் வைத்து
உவப்புடன் வணங்குகிறேன், இந்தியக்
குடியரசை, எங்கள் பேரரசை !





ஞாயிறு, 19 ஜனவரி, 2014

கண்டாங்கி, கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு !

சிகப்பு சேலை அணிந்த சீமாட்டி 
என் மனதை கொள்ளை கொண்டாளே  
அவள் புன்சிரிப்பை காட்டி 

தூரத்தில் நின்றாளே ஆற்றின் வளைவு காட்டி 
என் கால்கள் அவள் நின்ற திசை
நோக்கி நகர்ந்ததே போக்கு காட்டி   

சென்றாள் அன்ன நடை காட்டி  
என் கண் அவளைப் பின் 
தொடர்ந்ததே என்னிடம் டூ காட்டி 

என்னை அவள் பார்த்த கணம் 
தென்றல் வீசியதே என்னை நோக்கி  
அவள் பார்த்த பின் நான் 
என்னை விட்டு ஓடினேனே விலகி விலகி 

பூவைச் சுற்றிய சேலையின் நடுவே 
தெரிந்ததே ஒரு வெள்ளிக் கீற்று
என் கைகள் அதனை பக்கத்
துணையாக்க பறந்ததே வெள்ளிடை நிரப்ப   ...









வியாழன், 16 ஜனவரி, 2014

வேலின் வேந்தனே !

பூக்களை அடையா  தேனீ இல்லை 
காற்றைத் தேடா குழல் இல்லை 
கடலைச் சேரா ஆறு இல்லை 
நிலவை நேசிக்கா புலவனும் இல்லை 

வேலின் வேந்தனே, பராசக்தியின் புதல்வனே  
நீ இல்லாமல் நான் இல்லை
உன்னை நினையாத நாளும் இல்லை 
உன்னருளுக்கு நிகர் வேறு பொருளுமில்லை  
உன் அன்பில்லாமல் என் வாழ்க்கையுமில்லை ! 



செவ்வாய், 14 ஜனவரி, 2014

தமிழன்னையின் பிறந்தநாள்

பிறந்தநாளாம்
தமிழன்னையின்
பிறந்தநாளாம்

கம்பனையும் கல்கியையும்
வள்ளுவனையும் பாரதியையும்
வற்றாமல் ஈணும்
பெருந்தாயின்  பிறந்தநாளாம்

கார்பன் டேட்டிங்கும்
கணக்கிலட முடியா
தொன்மையின் பிறந்தநாளாம்

வயதில் தொன்மையனாலும்
சொல்லழகிலும் நடையழகிலும்
ரம்பைக்கு  சவால்விடும்
ரதியின் பிறந்தநாளாம்




அழகில் மயங்கி
சில பல
காலமாய்
கவர முயற்சித்து
கவ்வினார் மண்ணை
கலக்க முயற்சித்து
கலந்தார் காற்றோடு
அழிக்க முயற்சித்து
அழிந்தார் கால ஆற்றோடு


வாழ்த்த வயதில்லை
நம் அன்னையை
வணங்குகிறேன் பெருமையோடு
பேரிகைப் பேரிடியாய்
பறைசாற்றுகிறேன் தமிழனென்று !







திங்கள், 13 ஜனவரி, 2014

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

தித்திக்கும் கரும்பை திகட்டாமல் தின்று 
தித்திக்கும் அன்பை திகட்டத் தந்து
இனிப்பான பொங்கலை இனிதே உண்டு
இந்நாளும் இவ்வருடமும் இனிதே சிறக்க
தித்திக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !




பொங்கலோ பொங்கல் !

பொங்கலோ பொங்கலென உவப்புடன் கூவுவோம்
தமிழர் மனம் அன்பால் பொங்கிட
மாதம் மும்மாரியால் முப்போகம் விளைந்திட
பயிர் செழித்து பசிப் பிணியருத்திட
உழவனின் அடுப்பு ஓய்வின்றி ஒளிவிட
பொங்கலோ பொங்கலென உவப்புடன் கூவுவோம்







திங்கள், 6 ஜனவரி, 2014

காற்று வாங்க போனேன் .. ஒரு ...

காலைக் காதலன் கிழக்குக் 
கதிரவனின் கண்ணொளி பட்டு 
மாலைக் காதலன் முழு 
நிலவில் மோகம் கொண்ட 
வாடைக் காதலி வஞ்சிப் 
புவி மார்கழிப் பனியில் 
முகம் துடைத்தெழும் அழகிற்கு 
ஈடு இணை உண்டோ 


புதன், 1 ஜனவரி, 2014

கவிதை மழை

எட்டினேன் உயரத்தை
முட்டினேன் வானத்தை
பிழிந்தேன் மேகத்தை
மழையாய்  பொழியவே
கந்தா நீ
இயற்றி நான்
செதுக்கிய கவிதையை !



புத்தாண்டு

அளவாய் உண்போம், உடற்பயிற்சி செய்வோம்
சூரியனுக்கு முன் எழுவோம் என
பழையதாகிப் போன, போன
புதுவருடத்தின் புது உறுதிகளை
தூசு தட்டி மீண்டும்
புதுவருடத்தின் புது வசந்தமாய்
புதினம் செய்யும் புதுக்களம் !



புத்தாண்டு ஆசை !

அலைகடலென ஆர்ப்பரிக்கும்
மனதை ஆழ்கடலென
மாற்ற ஆசை

தடதடவன ஓடும்
எண்ணங்களைத் தடுத்து
அணைபோட ஆசை

கவலை மறந்து
கண்டமெல்லாம் ஊர்
சுற்ற ஆசை

துன்பத்தால் துவளாமல்
துடிப்போடு நடை
போட ஆசை

பயத்தை எதிர்கொண்டு
பயத்தை பயமடைய
வைக்க ஆசை

பணத்தால் அல்ல
மனதால் பகட்டாய்
வாழ ஆசை

எப்பொழுதும் தன்னலம்
பாராமல் பிறருக்கு
உதவ ஆசை

முத்தமிழில் முழ்கி
முத்தெடுத்து  கவிமாலை
புனைய ஆசை

கையளவு கற்க
தினமொரு நூலை
கையிலேந்த ஆசை

அமைதியான செழிப்பான
அழகான  உலகை
காண ஆசை

பற்றே இல்லாமல்
பரதேசியாய் பறந்து
திரிய ஆசை

நடந்ததைத் மறந்து
நடப்பதில் கவனம்
செலுத்த ஆசை

நடக்கப் போவதை
துறந்து இத்தருணத்தை
கொண்டாட ஆசை

வாழ்வைச்  சுழற்றும்
கோள்களின் சுழற்சியைக்
கற்க ஆசை

பொருளைத் தேடாமல்
மெய்பொருளைத்  தேடிக்
காண ஆசை

ஆசை அறுத்து
ஆசை அடக்கி
வாழ ஆசை  .....