புதன், 26 பிப்ரவரி, 2014

மகா சிவராத்திரி

ஆதி அறியா
அந்தம் இல்லா
ஆதிபகவா  !

ஆணும் பெண்ணும்
அவரவரின் அரையென்றுணர்த்தும்
அர்த்தநாதீஸ்வரா  !

வினையறுத்து குறைதீர்க்கும்
விடத்திற்கு மறியா
வைகல்நாதா !

காலத்தை வென்று
காலத்தைக் கடந்த
காலபைரவா !

குழகனின்  கனலே
கருணைக் கடலே
காலகாலா !

விநாயகனின் வித்தே
வேண்டுபவரின் சொத்தே
வில்வவனநாதா !

பிரணவப் பொருளே
பிரபஞ்ச முதலே
பிறைசூடா  !

அன்பின் உருவே
அரு உருவே
அடல்விடைப்பாகா !

மனதின் உள்ளே
மங்காது உணரும்
முக்கண்ணா !

அடியனின் தெரிவே
கண்ணின் சுடரே
எழுத்தின் தெளிவே
சொல்லின் சுவையே
செந்தமிழில் சொல்லெடுத்து
பைந்தமிழில் பாட்டெழுதி
சற்பிரசாதம் வேண்டி
சமைத்தேனே கவி !

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதலர் தினம்

பூவுலகில் காதல்
பூ பூக்காவிடில் ...

பூக்களின் விலையோ
பாதியாய்க் குறையும்
மன்மதனின் அம்போ
மலையாய்க் குவியும்

தொலைபேசி தொல்லையில்லாமல்
தொலைந்தே போகும்
அலைபேசி அழைப்பில்லாமல்
அழிந்தே போகும்


பைக்கின் பின்புறம்
பொலிவிழந்து போகும்
துப்பட்டா துப்பில்லாமல்
மறைந்து போகும்

கொஞ்சும் புது
தமிழ் சொற்கள்
காற்றோடு கரையும்
கடற்கரையில் சுண்டல்
சுவடில்லாமல் மறையும்

சிலரின் தூக்கம்
சத்தமில்லாமல் கழியும்
பல பெற்றோரின்
வேலை சிலமடங்காகும்செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

குறையில்லா மனது, நிறைவான உலகு

உடல் மாறி  இருந்தாலும்
மனதில் திடம் இருந்தால்
எண்ணத்தில் உரம் இருந்தால்
மலையை சாய்க்கலாம்
கடலைக் கடக்கலாம்
ஏன் உலகையே புரட்டலாம்

அன்றி ஊணில் இருந்தால்
சிறு கல்லும் மலையாகும்
சிறு மடுவும் கடலாகும்
மலராது காயும்
வாழ்வென்னும் பூ !
கண்டம் பல கடந்து இருந்தாலும்  என்னை பாதித்த இருவருக்கும், வாழ்ந்து காட்டிக்கொண்டு இருக்கும் பல கோடி நண்பர்களுக்கும் சமர்ப்பணம்   :

Vaikom Vijayalakshmi
Richie Parker

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

நானும் நீ, நான் வணங்கும் நாதனும் நீ

கருவும் நீ
கருவுக்குள் இருக்கும் உயிரும் நீ
பொருளும் நீ
பொருளைக் கொணரும் அருளும் நீ
வலியும் நீ
வலியைக் வதைக்கும் வழியும் நீ
திசையும் நீ
திசை எங்கிருக்கும் திரையும் நீ
கதிரும் நீ
கதிரை உமிழும் கனலியும்  நீ

எழுத்தும் நீ
எழுத்தாய் உதித்த சொல்லும்  நீ
சொல்லும்  நீ
சொல்லைக் கோர்த்த வரியும் நீ
வரியும் நீ
வரி உணர்த்தும் பொருளும் நீ
பொருளும் நீ
பொருளாய் மணக்கும் தமிழும் நீ

கந்தா
கவியும் நீ
கவி செதுக்கிய கவியும் நீ
நானும் நீ
நான் வணங்கும் நாதனும் நீ ...
ரத சப்தமி

ரட்சிக்கும் உலக மித்திரா
ரதத்தினில் வலம் வந்து
தினம் ஜகத்திற்கு உயிரூட்டுவாயே

தாமரையை ஒளிரச் செய்யும்
வெயிலோடு,  துவண்ட என்
நெஞ்சையும் மலரச் செய்வாயே

பகையும் தீயும் என்னை
படராமல் அணுகாமல்,பகலவனே
தினம் பனியாய் உருக்குவாயே

உலகம் மகிழ்வுற மழையைப்
பொழிந்து, அன்பு துளிர்விட
பண்பெண்ணும் விதையினை விதைப்பாயே

ஏழு வர்ண குதிரையேறி
எம் வாழ்வில் வர்ணமடிக்கும்
கதிரவா, வணங்குகிறேன் உன்னை
எந்நாளும் பொன்னாளாய் மலர்ந்ததுக்கு !

சகலகலாவல்லி

களையெடுத்து எந்தன் மனதில்
கலையை விதைத்த கலைவாணியே

பேதைமை எரித்து எனக்குப்
பாதை வகுத்த பாமகளே

நல்லதோர் வினை செய்ய
நாவன்மை அளித்த நாமகளே

உன்னருள் பெற்ற பெருவெள்ளத்தில்
என்னையும் சிறுதுளியாய் சேர்த்ததற்கு
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
வெள்ளைத் தாமரையில் வீற்று 
வெள்ளைப் பட்டுடுத்தி வரமளிக்கும் 
சரஸ்வதி தேவியே,சகலகலாவல்லியே