செவ்வாய், 6 டிசம்பர், 2016

அஞ்சலி

சந்தியாவின் மகளே
சரித்திரத்தின் துகளே

துணிவின் இலக்கணமே
தேயா தனித்துவமே

தூர நின்றவர்களை
உன் தோரணை கண்டு
வியக்க வைத்தாய்

எதிர்த்து நின்றவர்களை
உன் ஆளுமை கண்டு
அயர வைத்தாய்

பக்கத்தில் நின்றவர்களை
உன் பெருமை கண்டு
ஏங்க வைத்தாய்

மீண்டு வருவாய் என
நினைத்த தொண்டனை
மீளாத் துயரில் மூழ்கடித்தாய்

இரு விரல் காட்டி
எதிர்த்தவரை ஓட்டி
வரலாற்றின் ஏடுகளை
புரட்சியால் புரட்டிய தலைவியே !
நீ என்றும் புரட்சித் தலைவியே !




ஞாயிறு, 30 அக்டோபர், 2016

மழைக்கால சிந்தனைகள் !

இன்று அதிகாலை !! (10 மணி) அளவில், ஒரு புத்தகத்தோடு முற்றத்தில் நின்றேன். அத்தி பூத்தாற் போல மூன்று நாட்களாய் இங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. அத்தி கூட சில நேரம் விரைவாய் பூக்கும், இந்த மழை !! தமிழ்நாட்டில் இதை தூறல் என்பார்கள். இங்கே மழை , மழை, ஜாக்கிரதை  என தொலைக்காட்சியில் தொலை....நோக்கோடு பயமுறுத்துகிறார்கள்.
தூறலோ.. மழையோ, நிலத்திற்கு காதலனை பார்த்ததில் மிக மகிழ்ச்சி. மோகனமாய் மனம் மகிழ மணம் வீசிக் கொண்டிருந்தாள்.

என் வீட்டுக் கண்ணாடி கதவுகளுக்கு வெளியில் ஒரு இள வயது மரம்.  இள பெண்களை போல் சிக்கென்று செழுமையாய் நின்றது. சே, என்ன மனது இது !! மரத்திற்கு கூட மகளீரை உவமையாய் காட்டுகிறது என எண்ணத்திற்கு இணையாய், இன்னொரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

காற்றும் வேகமாக அடித்துக் கொண்டு இருந்தது. கீழ்ச்சட்டையை சரி செய்யும் மடோனாவைப் போல மரமும் தன்னை சரி செய்து கொண்டே இருந்தது. (அட , மறுபடியும் பெண் உவமை).

விஷயத்திற்கு வருவோம்! ஒவ்வொரு முறை காற்று அடித்த ஓய்ந்த பின்பும் மரம் தன் பழைய நிலைக்குத் திரும்பியது. பின் அடுத்த நொடியே காற்றில் மிதந்து, பின் தன்  நிலைக்கு திரும்பியது.கண்ட ஞாபகம், புயல் காற்றில் உடைந்து கிடந்த மரத்தையும் , பக்கமே நின்ற மூங்கில் மரத்தையும். ஓ , இது தான் சூக்குமமொ, புயலுக்கு வளைந்து கொடுத்தால் வாழ்க்கையும், எதிர்த்து நின்றால் துயரமுமோ  ? மனித வாழக்கையில் வரும் புயலையும் இப்படி சமாளிக்க முடியுமோ ? முடியும் என நினைக்கிறேன்,பல நேரம் உணர்ந்துள்ளேன். சில பேர் நினைக்கலாம், வளைந்து கொடுப்பதா என்று !! வளைந்து கொடுக்க கற்க வேண்டும் ,குனிந்து படியாய் படுக்க அல்ல !

அதே மர இலையின் நுனிகளில், நீர் கோர்வைகள், சொட்டுகளாய் உருமாற்றம் அடைந்து கொண்டு இருந்தன. மரம் , அதன் இலைகள், எவ்வளவு தான் ஆடினாலும், அவை கீழே சிதறவில்லை. மாறாக ஒரு சொட்டின் அளவு வந்தவுடன் தானாய் தரையை தொட்டன. நாமும் வாழக்கையில் நமது கனவுகளை இப்படித் தான் கையாள வேண்டுமோ ?  எவ்வளவு புயலுக்கு மத்தியிலும் ,உடும்புப்பிடியாய் கனவுகளைக் கவ்வி , நிறைவேறும் வரை நிலையாய் நிற்க வேண்டுமோ ?இரண்டாவது பாடம்.

வலது பக்கத்தில் ஒரு புறா , இந்த மழையினூடே ,ஒளிக் கம்பத்தின் மீது ஒய்யாரமாய், ஆரவாரமின்றி அமைதியாய்  அமர்ந்து இருந்தது. அந்த அழகை படம்பிடிக்க, கைப்பேசியின்  நிழற்பட பயன்பாட்டை நிறுவினேன். படம்பிடிக்க முடியவில்லை. கைபேசியோடு சண்டை போட்டுக் கொண்டு இருந்தேன். சட்டென்று என்னை எண்ண மின்னல் வெட்டியது. இந்த மழையிலும் குளிரிலும்  அமைதியாய்  அமர்ந்துள்ள புறாவை படமெடுக்க, கைபேசியின் காரணத்தால் அமைதியின்றி நான் !! இதில் யாருக்கு ஓரறிவு அதிகம் ?

இப்படி பாடங்கள் படங்களாய் என் முன்னேவிரிய , அமெரிக்கக் கிளை வருண பகவான் எனக்கு பாடம் கற்பிக்க கோபமாய் முடிவு செய்தார் போலும் !! என்னயா தூறல் என்றாய், இதோ பார் என்று. மழை மழையாய் பொழிந்தது !!



                                                                                        - சிந்தனைகள் தொடரும் ..


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

உறக்கம்

தழுவ நினைத்தால்
தறிகெட்டு ஓடுகிறாய்
அணைக்க நினைத்தால்
அணைக்காமல் நகர்கிறாய்

வேண்டிய நேரத்தில்
வர மறுக்கிறாய்
வேண்டாத நேரத்தில்
வலிய வருகிறாய்

மண்ணில் உள்ள
எல்லோருக்கும் சமமான
பொருள் நீ
அருளும் நீயே
ஆனந்தமான என்
அழகான உறக்கமே !


செவ்வாய், 19 ஏப்ரல், 2016

மாய அறை

எண்ணங்கள் குவியலாய்
எழும் அறை
பாரங்கள் சீட்டுக்கட்டாய் 
சரியும் அறை
கனவுக் கோட்டைகள்
கட்டும்  அறை
நிஐத்தைக் கோட்டை
விடும் அறை
அரசனாவதும்
ஆண்டி ஆவதும்
அரை நொடியில் 
நிகழம் அறை

என் குளியலறை !

வெள்ளி, 25 டிசம்பர், 2015

சீட்டுக்கட்டு கோபுரங்கள்

மனிதரின் வாழ்க்கை
சீட்டுக்கட்டு கோபுரங்கள்
பார்த்து பார்த்து
ஒவ்வொரு சீட்டாய்
சேர்த்து சேர்த்து
எழுப்புகின்றார் அவரது கோபுரத்தை

அவர் நினைத்த உயரத்தில்
ஆனந்தம் அடைகின்றார்
ஆனந்தம் சில நொடிகளே

பக்கத்து வீட்டுக்காரரின்
உயர்ந்த கோபுரத்தை
காணும் வரையில்
இல்லை எதிர்
கோபுரத்தின் அழகில்
மயங்கும் வரை ..

ஆனந்தம் சில நொடிகளே
ஆனந்தம் சில நொடிகளே
செருக்காய் மாறும் முன்
கோபுரத்தின் பிரமாண்டம்
பிரமாண்டமாய் மறைக்கிறது
பல நேரங்களில்
நம் கண்ணை

மறந்து விடுகிறோம்
நடுவில் ஒரு சீட்டு
விழுந்தாலும் நாம்
தரையில் என்று

மறந்து விடுகிறோம்
கோபுரமே ஆனாலும்
அவை சீட்டுகளே
வெறும் காகித
சீட்டுகளே என்று







ஞாயிறு, 15 நவம்பர், 2015

வெள்ளம், நமது கள்ளம்

ஆற்றின் அளவை சுருக்கி
குளத்தின் வயிறை நிரப்பி
நீரின் இடத்தைத்  திருடி
விண்ணைமுட்டும் வீடாய் மாற்றினோம்

இருந்த இடத்தைக் காணாது
தேடி அலையும் நீரை
குறை சொல்லிப் பயனில்லை
கூக்குரல் எழுப்பும் மனிதா !


புதன், 23 செப்டம்பர், 2015

ரப்பர் ரம்பை

ரப்பரில் செய்த
ரம்பையோடி நீ !
நெருங்கி வந்ததும்
தெறித்து ஓடுகிறாயே
சுவற்றிலடித்த பந்து போல !

வியாழன், 26 பிப்ரவரி, 2015

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு
விந்தையான ஆசான்

பல தருணங்களில்
பரீட்சை வைத்துப் 
பாடம் நடத்தும்
சில தருணங்களில்
பாடம் மட்டும் சொல்லி   
பரிசு கொடுக்கும் 

சிற்சில நேரங்களில்
பரிசு கொடுத்துப்
பின் பாடம் நடத்தும்

தரிசைத்  தங்கமாக்கும்
தங்கத்தைத்  தரிசாக்கும்
தலை கனமானால் !


செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சிவராத்திரி

ஆதியும் நீ
ஆதி சக்தியின் பாதியும் நீ
அந்தமும் நீ
திக்கு எங்கிருக்கும் சந்தமும் நீ
ஓசை நீ
ஓசை புரியா இசையும்  நீ

முற்றும் நீ
முற்று இல்லாத பற்றும் நீ
அன்பும் நீ
அன்பே சிவமென்றுணர்தும் பண்பும் நீ

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ம(ன)ருத்துவத் திருடி

உன்னை கண்டதிலிருந்து
பைத்தியமாய் அலைகிறேன்
பைத்தியங்களுக்கு  வைத்தியம்
பார்க்கும் உன்
வைத்திய மனதில்
கிடைக்கும் இடத்திற்காக !