திங்கள், 14 ஆகஸ்ட், 2017

அகவை 30

இரு பத்துகளை  எம்பி  
இன்று 
அகவை முப்பது

திரும்பிப் பார்க்கின்றேன்  ..

பரபரக்கும் உலகினில்
பரபரப்புக்குப்  பஞ்சமில்லாமல்
பரபரப்பாய் நான்

என்னவென்று தெரியாமல்
எப்படி என்று அறியாமல்
புரியாத பந்தயத்தில்
பந்தயக்குதிரையாய் நான்

தியானம் தினம் செய்
உடலை பயிற்சி செய்
நாவடக்கம் பழகென
எட்டு முழ வேட்டிக்கு
போட்டியாய் என் பட்டியல்

நொடி நொடியாய் வாழ்கவென்று
கோடிப்  பேர் சொன்னாலும்
நொடிக்கொருமுறை புரிந்தாலும்
கட்டுக்கடங்காமல் எம்மனம்
கட்டவிழ்த்த குதிரையாய்

தொட்டுவிடும் தூரமா
தொலைதூரமா தெரியவில்லை
வாழ்வின் பல ஆசைகள்

முன்னே விழிக்கின்றேன்
அடுத்த முப்பதை ...

கற்ற பாடங்களும்
கடந்த பாதைகளும்
நடக்கின்றன முன்னே
உற்றத் துணையாய்

முதல் முப்பது
முத்தாய் போனது 
இரண்டாம் முப்பது 
இன்பமாய்ப்  போகட்டும்
செழிப்பாய்ப்  போகட்டும் 
செம்மையாய்ப்  போகட்டும்
அறியாத இடங்களில்
தெளிவாய் இருக்கும் 
புரியாத சக்தியின்
உண்மையை உணர்த்திப் போகட்டும்!!

  1 கருத்து: