பேரழகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேரழகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஜூலை, 2017

கவிதை அருள்வாய் நிலவே

வானவீதி அளக்கும் வெண்ணிலவே
கவிஞனின் அளவுகோலே பொன்னிலவே
உன்னை வரையாதவன் ஒவியனல்ல
இயற்றாதவன் கவிஞன் அல்ல
ரசிக்காதவன் மனிதனே அல்ல

இரவு கண்ட உன்னையும்
இரந்து கண்ட கன்னியையும்
ஒப்பிட்டு ஓதுதலே 
கவிஞர் கல்லூரியில்
கண்ணியமாய் கரைசேர
ஒப்புயர்வு வழியாகும்

பல ஆயிரம் வருடங்களாய்
பல்லாயிரம் கவிஞர்கள்
பல்லாயிரம் கோடி கவிதைகளில்
இயற்றினார் உன்னை

நகலெடுக்க மனதில்லை
பிரதி எடுத்துப் பயனில்லை
படியெடுக்கப் பிடிக்கவில்லை

வார்த்தை தேடினேன்
புது வார்த்தை தேடினேன்
தமிழ் அகராதியில் !

அகராதியோ எள்ளி நகைத்தது
எட்டிப் போகச் சொல்லி இடித்தது

இடித்த வேகத்தில் இடறி
விழுந்தேன்
ஓடினேன் வேங்கையென

உன்னைக் கண்டு
கவிதை புனைய

நீயோ சொல்லாமல் கொள்ளாமல்
தேய்பிரையென தேய்ந்து விட்டாய்

துவளாமல் திணறாமல் திகைக்காமல்
வந்த வெளிதனை
வெறிக்காமல் பார்த்தால்
சிதறாமல் எனக்கும் கொடுத்துள்ளாய்
சிறு கவிதையினை

புரியவைத்தாய்
ஒப்பிடுவது மட்டும் கவிதையல்ல
நினைப்பதற்கு ஒப்பனை சேர்ப்பதும்
கவிதையே என !











சனி, 26 ஏப்ரல், 2014

அழகுப் பூக்கள்

பூக்கள் அழகோ
பூக்கள் அழகோ
பூக்கள் போர்த்தும் பூமி அழகோ
பூமி உறையும் பிரபஞ்சம் அழகோ ?

பூக்கள் அழகோ
பூக்கள் அழகோ
பூக்கள் சொரிந்த கூந்தல் அழகோ
கூந்தல் சூடும் பெண்மை அழகோ ?

பூக்கள் அழகோ
பூக்கள் அழகோ
பூவினும் மெல்லிய மழலை அழகோ
கள்ளமில்லா மழலையின் நகை அழகோ ?

பூக்கள் அழகோ
பூக்கள் அழகோ
மனதைத் திருடும் பூக்கள் அழகோ
பிரம்மன் படைப்பில் பூக்கள் பேரழகோ ?